Cinema

டியர் காம்ரேடுக்கு சலாம் போடலாமா? : ‘டியர் காம்ரேட்’ விமர்சனம்!

இயக்கம்: பாரத் கம்மா

நடிப்பு: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, ஸ்ருதி ராமசந்திரன்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங்க்

எடிட்டிங்: ஸ்ரீஜித் சாரங்க்

எல்லாவற்றுக்கும் கோபப்படும் கல்லூரி இளைஞன் விஜய் தேவரகொண்டா, ஒரு சிறு விபத்தில் கிரிக்கெட் வீராங்கனை ராஷ்மிகாவை சந்திக்கிறார். பின் அவர் தன் சொந்தம் என அறிந்து காதலிக்கிறார். இருவரும் சேர்ந்தார்களா, ராஷ்மிகாவின் கிரிக்கெட் கனவு என்னானது என்பதே கதை.

கீதா கோவிந்தம் மூலமாக பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய்-ராஷ்மிகா கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். எனவே காதல் காட்சிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் 'டியர் காம்ரேட்' என்ற டைட்டில் எல்லோரையும் கவர்ந்தது. "புலராத" பாடல் ஹிட் இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் கொஞ்சம் ஏற்றியது. இத்தனையையும் காப்பாற்றினார்களா..?

'கோபக்கார இளைஞன்' என்ற விஜய் தேவரகொண்டாவிற்கே  உரிய அந்த பாத்திரம்தான் இதிலும். இதற்கு முன் கல்லூரி மாணவராக இருந்தவர் இந்தப் படத்தில் கல்லூரி மாணவர் தலைவர் (அர்ஜுன் ரெட்டி தான் ஹிட்டுல). படத்தின் தலைப்பிலுள்ள "Fight for what you love" என்பதை அப்படியே புரிந்துகொண்டார்கள் போல.

படத்தில் வெறும் காதலுக்காக மட்டும்தான் சண்டை போடுகிறார்கள். இருந்தாலும் இதற்கு 'காம்ரேட்' என்ற பதத்தைப் பயன்படுத்திய உயர்ந்த நோக்கத்தைப் பாராட்டலாம்! அதிலும் அந்த சேகுவேராவைப் போன்ற மோட்டார் சைக்கிள் டைரீஸ் பயணம் காம்ரேட் என்பதற்கு இன்னும் கொஞ்சம் வலுசேர்க்கிறது!!

படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம். காரணம், படத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கின்றன. ஹீரோவிற்கான கதை ஒன்று, ஹீரோயினுக்கான கதை ஒன்று மற்றும் படம் முடியும் என நினைக்கும் நேரத்தில் புதிதாகத் தொடங்கும் கதை ஒன்று. இதில் யோசிக்காமல் ஏதேனும் ஒரு கதையை வெட்டியிருந்தால் கூட படம் தாராளமாக பார்க்கக்கூடிய நேரத்திற்குள் வந்திருக்கும். ஒவ்வொரு ஃபைட் சீனும் இருமடங்கு அதிகமான நீளம். விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியைத் தந்தாலும் அஹிம்சாவாதிகள் இதைத் தாங்கிக் கொள்வது கடினம். ஆனாலும் அதை அப்படியே வைத்த இயக்குநரின் நம்பிக்கை பெரும் பாராட்டுதலுக்குரியது.

உண்மையில் இந்த வருடம் ஜஸ்டின் பிரபாகரனுக்கானது என்றே சொல்லலாம். 'மான்ஸ்டர்' படத்தில் இவர் இசை கவனிக்கத்தக்கதாக இருந்தது. `டியர் காம்ரேட்’ படத்தில் அது இன்னும் பெரிய தளத்தை அடைந்திருக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என படம் முழுக்க தனி ஆளாகப் பட்டாசாக வேலை செய்திருக்கிறார். நான்கு மொழிகளில் வெளியாகும் படம், இசைக்காக பெரிய ஸ்பேஸ் இருக்கும் படம் என்ற பொறுப்பை உணர்ந்து அவ்வளவு அழகாக இசையமைத்திருக்கிறார்.

"புலராத, ஆகாச வீடு" மட்டும் கேட்டுவிட்டு படம் பார்க்க தொடங்கினால், காம்ரேட் ஆந்தெம், அழைப்பாயா, நான் வருவேன், கிரா கிரா என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேஞ்ச். அந்த கேண்டீன் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஆனால், யூடியூப்-ல் பார்க்க அதுவும் அட்டகாசம். படத்தில் வரும் ஹ்யூமர், காதல், மாஸ் என ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து அந்த உணர்வை அப்படியே பின்னணி இசையாக மாற்றியிருக்கிறார். இதற்கெல்லாம் படம் கொஞ்சம் நியாயம் செய்திருக்கலாம்.

மொத்தத்தில், சலாம் செய்ய மனம் வரவில்லை டியர் காம்ரேட்!!!