மு.க.ஸ்டாலின்

மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !

மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் மூத்த அரசியல்வாதியும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவும் கழக அரசை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தளபதி ஸ்டாலின் அவர்களின் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்! ஏராளம்! இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றத்தக்க வகையில் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அரும்பெரும் சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் மகளிர் உரிமைத் திட்டம், அவர்களுக்கு பேரூதவி செய்யும் விடியல் பயணத் திட்டம், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான புதுமைப் பெண் திட்டம், பள்ளி மாணவ - மாணவியர்களுக்கான காலை உணவுத் திட்டம், கல்வி கற்கும் - பணியில் இருக்கும் மகளிருக்கு உதவிடும் தோழி விடுதி திட்டம், திருநங்கையர்களுக்கு 3 சென்ட் இடத்தில் தனி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம், பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் சுய உதவிக் குழுவினருக்கான திட்டம் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வருவதைக் கண்டு பொதுமக்கள் எல்லையிலா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !

முதல்வரின் காலை உணவுத் திட்டம், தெலுங்கான மாநில அரசால் பின்பற்றப்படுவது மட்டும் அல்ல, நாடு கடந்து கனடாவிலும் இதனைப் பின்பற்றுவதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை கர்நாடக மாநில அரசு பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளது.

தொழில் வளத்திலும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு சாதனை முத்திரையைப் பதித்துள்ளது. முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டிலும், அயல்நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தம் நடைபெற்று, தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சியை தமிழ்நாடு அரசு நிகழ்த்தி உள்ளது.

இது தவிர, புதிதாக 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்துவைக்கப்பட்டு உள்ளது. இவைகளின் வாயிலாக 74,757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உயர்கல்வி மாணவர்களுக்கு உதவி, தொழிற்பயிற்சித் துறையில் மாணவர்களுக்கு உதவிடும் முதல்வனாகும் எனும் தனி முயற்சி, அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை என பல துறைகளிலும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு சாதனை நிகழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

முத்தமிழ் அறிஞர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் “ஸ்டாலின் என்றால் உழைப்பு! உழைப்பு! உழைப்பு!” என்று பாராட்டியதற்கு ஏற்ப செயல்திறன் மிக்க சீர்மிகு அரசாக அவரது அரசு வீறுநடை போட்டு வருகிறது.

நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதியுடன் ஆட்சிப் பயணத்தில் மூன்றாண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

சாதனைச் சரிதம் தொடரட்டும்! திராவிட மாடல் அரசு தன் அரும்பெரும் சாதனைகளால் புதிய வரலாறு படைக்கட்டும்!

banner

Related Stories

Related Stories